26 மார்ச் வரை நகர்ப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் மூலமாக வரும் சேவைகள் குறைந்த உடன் தான் அவர்கள் மீதான பார்வை திரும்புகிறது.
– பி.சாய்நாத்.
கோவிட்-19 பெருந்நோய் தொற்று மற்றும் அதன் தொடர்ச்சியான தேசம் முழுமையான ஊரடங்கினால் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் வாழ்வாதார சிக்கல்கள் ஒன்றும் புதிய விஷயமல்ல. எனினும் ஒரு பெருந்தோய் தொற்று கொடுத்த நெருக்கடி மூலமே நடப்பு காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இம்மக்களை நகர்ப்புற இந்தியாவின் கண் முன் கொண்டு வந்திருக்கிறது. ரமோன் மாகசசே விருது பெற்றவரும், People’s Archive of Rural India (PARI)வலைத்தளத்தின் பி. சாய்நாத் தொடர்ந்த பல தசாப்தங்களாக புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வு நிலை குறித்து பதிவு செய்து வருகிறார். இந்த பேட்டியில், அவர் இம்மக்களின் இன்றைய நிலை குறித்தும் அடுத்து செய்ய வேண்டியவை குறித்தும் பேசுகிறார்.
இனி,
அவுரங்கபாத் நகரத்திற்கு அருகே ரயில் தண்டவாளங்களில் உறங்கிய 16 தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி அவர்கள் கொலையுண்டதை நாம் கண்டோம். இத்தொழிலாளர்களை தங்கள் வீடுகளை நோக்கி விரட்டிய விஷயங்களைக் குறித்து பேசாமல், உடனே அவர்கள் ஏன் ரயில் தண்டவாளங்களில் உறங்கினார்கள் என எழுந்த முதல் கேள்வி நம்மை குறித்து என்ன சித்திரத்தை தீட்டுகிறது?
ரயில் அடியில் நசுங்கி இறந்த அத்தொழிலாளர்களின் பெயர்கள் என்னவென்றாவது கவலைப்பட்ட ஆங்கில ஊடகங்கள் எத்தனை? அந்தப் பாவப்பட்ட தொழிலாளர்கள் பெயர்கள் கூட தெரியாமல் அடையாளம் இன்றி இறந்து போனார்கள். இதுதான் ஏழைகள் மீதான நம் பார்வை என்பது. இதுவே ஒரு விமான விபத்து நடக்கிறது என வைத்துக் கொள்வோம். விபத்து நடைபெற்ற சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விவரங்கள் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கும். 300 பேர் இறந்திருந்தாலும் அவர்கள் அத்தனை பேர் பெயர்களும் செய்தித்தாள்களில் இடம் பெற்றிருக்கும்.